ஈரோடு மாவட்டம், கோபி தாலுக்கா, சிறுவலூர் MGR நகரில் வசிக்கும் பனியன் தொழிலாளி பாபு (வயது-29) திருப்பூர் SRV ஏற்றுமதி பனியன் கம்பெனியில் 7ஆண்டுகள் டெய்லராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் 01-9-20 அன்று மாலையில் வேலை செய்துகொண்டு இருக்கும்பொழுது பனியன் கம்பெனிக்குள் திடீரென இறந்து விட்டார். இறந்தவரின் குடும்பத்துக்கு கம்பெனி நிர்வாகம் எந்தவித உதவியும் செய்ய முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் விழுதுகள் அமைப்புக்கு தகவல் அளித்தினர். விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் V.கோவிந்தராஜ் தலைமையிலான குழு உடனடியாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் காவல்துறை மற்றும் கம்பெனி நிர்வாகத்துடன் வாதுரை செய்து இன்று (2-9-2020) பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் பெற்றுத் தந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர் ஒப்பந்த தொழிலாளி என்பதால் தொழிலாளியின் மரணத்தை கம்பெனி நிர்வாகம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இறந்த தொழிலாளியின் பெயரில் கம்பெனி அடையாள அட்டையோ, மருத்துவ காப்பீடோ, ஆயுள் காப்பீடோ, PF, ESI, நலவாரிய அட்டைகள் எதுவும் இல்லை. ஆகவே பனியன் தொழிலாளர்கள் விழிப்புடன் இருந்து பனியன் நிர்வாகத்தினரிடம் போராடி தொழிலாளர் நல உரிமைகளை பெறுவது அவசியமாகும். இல்லையேல் தொழிலாளர்களின் எதிர்பாராத மரணங்கள் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பெரும் இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். ஆகவே பனியன் தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து தொழிலாளர் உரிமைகளைப் பெற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
தொழிலாளர் நலனுக்காக,
வி. கோவிந்தராஜ்
ஒருங்கிணைப்பாளர்,
விழுதுகள் அமைப்பு,
அவினாசி.
