திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெறும் சித்ரா பெளர்ணமி திருவிழா பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் சித்ரா பெளர்ணமி திருவிழாவும் ஒன்று. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் இந்தத் திருவிழாவுக்காக கூடுகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை சித்ரா பெளர்ணமி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகங்கள் இணைந்து செய்துள்ளன.
கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து: சித்ரா பெளர்ணமி திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து, தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இரவு 11.10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
இலவச தரிசனம், ரூ.20 மற்றும் ரூ.50 கட்டண தரிசனங்களும் உண்டு. வியாழக்கிழமை மட்டும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தடையில்லா மின்சாரம்…
பக்தர்கள் நலன் கருதி வியாழக்கிழமை 24 மணி நேரமும் திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதை பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல், திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம், கிரிவலப் பாதையில் உள்ள ஊராட்சிகளின் நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், சித்ரா பெளர்ணமி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் புதன்கிழமையே திருவண்ணாமலைக்கு வந்துவிட்டனர். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
1,500 பேருந்துகள் இயக்கம்: சென்னை, பெங்களூர், தருமபுரி, வேலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,500 பேருந்துகள் சித்ரா பெளர்ணமி திருவிழாவுக்காக இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை நகரைச் சுற்றி 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆட்சியர் ஆய்வு…
இந்நிலையில், சித்ரா பெளர்ணமி திருவிழாவுக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பிட வசதிகள், மருத்துவ முகாம்கள், தாற்காலிகப் பேருந்து நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் அ.சுந்தரம்பாள், வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.