வியர்வை நாற்றத்தைத் தடுக்கப் பல வகையான செயற்கை வாசனைத் திரவியங்கள், சந்தைகளில் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவை தரமானவையா, நம் உடலுக்கு ஏற்றவையா என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. அதிகரிக்கும் வியர்வையோடு சேரும் செயற்கை திரவியம் வேதியியல் மாற்றம் அடைந்து, ஒரு வித்தியாசமான நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு, ஒவ்வாமை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.
வியர்வை நாற்றத்தைத் தடுக்கச் செயற்கைப் பொருட்களுக்குப் பதிலாகச் சந்தனச் சாந்து, ஜவ்வாது, பன்னீர் போன்றவற்றை அளவாகப் பயன்படுத்தலாம். ஆடைகளுக்கு நறுமணம் ஊட்டத் துவைக்கும்போது, சில வகை திரவங்களைச் சேர்ப்பதுபோல, முற்காலத்தில் அகிற் புகையூட்டி ஆடைகளுக்கு நறுமணம் சேர்த்ததாக `மதுரைக் காஞ்சி’ நூல் குறிப்பிடுகிறது. கூந்தலுக்கும் உடலுக்கும் மணமூட்ட அகிற்கட்டை புகையைச் சங்க கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இப்போதும் அதை முயற்சித்துப் பார்க்கலாம்.
நன்றி:தி இந்து
தொகுப்பு:க.கமலேஷ்