ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சேமிப்பு கிடங்குகளில் நாசமாகும் தானியம்

0
சேமிப்பு கிடங்குகளில், உணவு தானியங்களை அடுக்குவது குறித்து, ஊழியர்களுக்கு, இந்திய உணவு கழகம் பயிற்சி வழங்க உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 13 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 292 சேமிப்பு கிடங்குகள்; தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில், 6.75 லட்சம் டன் இருப்பு உள்ள, 55 சேமிப்பு கிடங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

வாணிப கழகத்தின் கிடங்குகளில், ரேஷன் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள், அரசு நிறுவனங்கள் ஆகியவை, சேமிப்பு கிடங்கு நிறுவன கிடங்குகளை வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றன. அரசு கிடங்குகளில், உணவு தானியங்கள் முறையாக அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் அவை நாசமாகி வருவதால், அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவன உயர் அதிகாரிகள், கிடங்குகளில் அடிக்கடி ஆய்வு செய்வதில்லை. அவர்கள் ஆய்வு செய்தால், தானியங்கள் வீணாவதை தடுக்க முடியும். இதையடுத்து, தானியங்களை அடுக்கி வைப்பது குறித்து, இந்திய உணவு கழக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.

இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய உணவு கழகத்திற்கு, நாடு முழுவதும் கிடங்குகள் உள்ளன. அவர்கள், உணவு தானியங்களை அடுக்கி வைத்தல், லாரிகளில் கொண்டு செல்லுதல் என, அனைத்து பணிகளையும் முறையாக செய்கின்றனர். இதனால், இந்திய உணவு கழக கிடங்குகளில், தானியங் கள் வீணாவதில்லை. எனவே, அவர்கள் மூலம், தானியங்களை அடுக்கி வைப்பது குறித்து, வாணிப கழகம் மற்றும் சேமிப்பு கிடங்கு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. சட்ட சபை முடிந்ததும், அந்த பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக