செவ்வாய், 14 ஜூன், 2016

எதையும் தாங்கும் கூடங்குளம் அணுஉலைகள்: ரஷ்யா

0
மாஸ்கோ: விபத்து ஏற்பட்ட ஜப்பா னின் புகோஷிமா அணுஉலையை விட கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என ரஷ்யா கூறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுஉலைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஜப்பானின் புகோஷிமா அணுஉலையில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, எதிர்ப்பு அதிகரித்தது. இருப்பினும், கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பு மிகுந்தவை எனக்கூறி மத்திய அரசு அனைத்து புகார்களையும் நிராகரித்தது. முதலாவது அணுஉலை துவக்கப்பட்டு மின் உற்பத்தி துவக்கப்பட்டது. இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கூடங்குளம் அணுஉலையை கட்டமைத்த நிறுவனத்தின் இந்திய பிரிவு இயக்குநர் விளாடிமிர் ஆங்கிலோவ் கூறியதாவது: கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள விவிஈஆர் அணு உலைகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை தாங்கும் வல்லமை பெற்றது. புகோஷிமா அணுஉலையை விட வலிமையானது. புகோஷிமா அணுஉலை அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்டது. புகோஷிமா சம்பவத்துடன் கூடங்குளத்தை ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, கூடங்குளத்தில் அமைக்கப்படும் 3 மற்றும் 4வது அணுஉலைகளில் தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அணு உலைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய இந்தியா கோரிக்கை விடுத்தது. நாங்களும் அணுஉலைகளை ஆய்வு செய்து மேம்படுத்தி வருகிறோம். எனவே 3 மற்றும் 4வது அணுஉலைகள் பூகம்பம், பருவமழை மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றில் பாதிக்காத வகையில் அமைக்கப்படும். இது உயர்ந்த தொழில்நுட்பம். புகோஷிமா சம்பவத்திற்கு பின் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், கூடங்குளம் அணுஉலையின் முதல் மற்றும் இரண்டாவது அணுஉலையிலும் முன்னரே செய்யப்பட்டுள்ளது. இந்த அணுஉலைகளை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். உயர்ந்த பாதுகாப்பு அடிப்படையில் 5 மற்றும் 6வது அணு உலை நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது எனக்கூறியுள்ளார்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக