வெள்ளி, 20 மே, 2016

தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்

0
தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்.

தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் :

புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்: ஜெ.,

வெற்றிக்கு பின் போயஸ் கார்டனில் அதிமுக,. பொதுச்செயலாளர் ஜெ., நிருபர்களிடம் பேசுகையில்: அதிமுகவுக்கு மக்கள் அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை செலுத்த அகராதியில் வார்த்தை இல்லை. 1984 க்கு பின் இப்போது மீண்டும் தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறோம். 10 கட்சிகள் சேர்ந்து எதிர்த்தாலும், பலமான கூட்டணி இல்லாத நேரத்திலும் நான் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் குரல் மகேசன் குரல், ஆண்டவன் என்றால் மக்கள் என்றும் எடுத்து கொள்ளலாம். மக்கள் என்னை கைவிடவில்லை. என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நானும் வைத்துள்ளேன். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரம் கொண்டு இன்னும் செயல்படுவேன். என் வாழ்வு தமிழக மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. என்றென்றும் மக்களுக்காக உழைப்பேன். என்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த அரும்பெரும் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் தோழமை கட்சி தலைவர்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு ஜெ., கூறினார்.

மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவோம்: ஸ்டாலின்

சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த 2011 தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். சட்டசபை வரலாற்றில் பெரும்பான்மையான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். மக்களின் நம்பிக்கைக்கு நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். சென்னையில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதற்கு, அதிமுக அரசின் அலங்கோலத்தை உணர்ந்து கொண்டதே காரணம் எனக்கூறினார்.

மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம் : சோனியா

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்., கட்சிக்கு ஓட்டளித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மக்கள் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார். மேலும் காங்கிரசிற்கு வெற்றி தேடித்தந்த புதுச்சேரி மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
 
பண நாயகம் வென்றுள்ளது: விஜயகாந்த்

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில் ஜனநாயகத்தை பண நாயகம் வென்றுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மமே வெல்லும். எங்கள் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு தேமுதிக., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளோம் : ராகுல்

5 மாநில சட்டசபை தேர்தலில் மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் வென்றுள்ளதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் கடினமாக பணியாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கட்சிகள் வெட்கப்பட வேண்டும்: முத்தரசன்

தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,தமிழக தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு திமுக அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தன. கருணாநிதி ஜெ., தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. இது ஜனநாயகத்தை சீர்குலைத்த வெற்றி. ஜனநாயக பூர்வமாக வெற்றி பெவில்லை.பணத்தால் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக இரு கட்சிகளும் வெட்கப்பட வேண்டும். எங்கள் அணிக்கு வரவேற்பு இருந்தது. ஊழல் இல்லாத தலைவர்கள் எங்களுக்கு கிடைத்த ஆதரவை தடுத்து நிறுத்தவே பிரசாரம் வகுத்தனர்.தாங்கள் இருவரில் ஒருவர் தான் ஆட்சி இருக்க வேண்டும் என கருணாநிதியும், ஜெ.,வும் நினைக்கின்றனர். இதுஎழுதப்படாத ஒப்பந்தம். ஒருவரை ஒருவர் விமர்சித்தனர். மற்றவரை விமர்சிக்கவில்லை.எங்கள் மீதான அச்சமே காரணம் எங்களுக்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நன்றி எனக்கூறினார்.

200 க்கும் 250 ரூபாய்க்கும் ஓட்டு: கிருஷ்ணசாமிஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது. மக்கள் 200 க்கும் 250 ரூபாய்க்கும் ஓட்டளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
நன்றி : தினமலர்
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக