ஒரு படம் ஓடினா நல்ல இயக்குநர்னு சொல்றாங்க. இன்னொரு படம் சரியா போகலைன்னா நல்ல இயக்குநர் இல்லைன்னு சொல்வாங்க. அதனால அதுவும் இல்ல. இப்படி எங்கிட்ட நிறைய விஷயம் இல்ல. இருக்குற ஒரே ஒரு விஷயம் நல்ல டான்ஸர். அந்த டான்ஸை எல்லாரும் ஏத்துக்குற அளவுக்கு எனக்கு சொல்லிக்கொடுக்க ‘ரெட் அண்ட் ரெட்’ டிரெஸ்ல வந்தவர்தான் என் குரு தர்மராஜ் மாஸ்டர்.
அதிகாலை அஞ்சரை மணிக்கு கண் முழிச்ச தும், நான் பார்க்கும் முதல் முகம் தர்மராஜ் மாஸ்டர். பிரகாசமான முகம். கோபமான முகமும்கூட. காலில் சிலிப்பர் போட மாட்டார். சைக்கிள்லதான் வருவார். எங்க மூணு பேருக்கும் அவர்தான் டான்ஸ் கத்துக்கொடுத்தார். டான்ஸ்ன்னா என்னன்னு அவர் மூலம்தான் எனக்குத் தெரியவந்தது. அப்பாவும் அவரும் ஒண்ணா டான்சர்ஸா வேலை பார்த்தவங்க. அப்பா மேல மாஸ்டர் அவ்வளவு மரியாதை வெச்சிருப்பார். அதேபோல தர்மராஜ் மாஸ்டர் என்ன சொன்னாலும் அப்பாவும் கேட்டுப்பார். மாஸ்டரை எங்ககிட்ட அப்பா அறிமுகப்படுத்தினப்போ ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவை காட்டின மாதிரிதான். கிட்டத்தட்ட எனக்கு அவர் தெய்வம் மாதிரியேதான்!
அந்த அதிகாலையில எங்களைப் பார்த்து ‘‘டேய் பசங்களா… இங்கே வாங்க! கை விரல் களை இப்படி வெச்சு நமஸ்காரம் செய்ங்க?’’ என்றார். ‘ஏன் வரணும்? எதுக்கு நமஸ்காரம் பண்ணணும்’னு புரியலை. ஆனா, ஒண்ணும் கேக்காம அவர் சொன்னதைப் பண்ணோம். ‘ம்ம்ம்… ஆரம்பிக்கலாமா?’ என்றார். ‘என்ன ஆரம்பிக்கலாமா’ன்னும் புரியலை. ‘‘இடுப்பில் கை வைங்க. அரை மண்டி போடுங்க’’னு சொல் லிக்கிட்டே ‘‘தா… தை… தா...’’ என்று டான்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சார். அப்போதான் எங் களுக்குத் தெரிஞ்சது நாங்க டான்ஸ் கத்துக்கப் போறோம்னு. அப்போ தொடங்கின டான்ஸ்தான் இப்போகூட ஆடிக்கிட்டே இருக்கேன்.
அந்த டைம்ல, அப்பா ஆழ்வார்பேட்டையில சொந்தமா வீடு வாங்கியிருந்தார். சொந்த வீடு வாங்கிட்டோம்னு அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் சந்தோஷம். ஆனா, எனக்கு மயிலாப்பூர்ல இருந்த பழைய வீடு மாதிரி அது தோணலை. அங்கே கோலி விளையாடியது, காத்தாடி விட்டதெல்லாம் இங்க வந்ததும் கட் ஆச்சு. இங்கே ஒன்லி கிரிக்கெட் மட்டும்தான். அந்த வீட்டு ஹால்லதான் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சோம். அப்போ ஆறாவதோ, ஏழாவதோ படிச்சிட்டிருக்கேன். அந்த வயசுல அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும். நான், அண்ணன் ராஜூ, தம்பி பிரசாத், என் மாமா, இன்னும் ரெண்டு பேர்னு மொத்தம் 6 பேருக்கு மாஸ்டர் அப்போ டான்ஸ் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சார். அந்த வயசுல பரதநாட்டியம் எங்களுக்குப் புடிக்கவே புடிக்கல. அதுவும் காலையில எழுந்து டான்ஸ் கத்துக்கணும்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, என்ன செய்ய முடியும்? மாஸ்டர் அப்பாவோட ஃபிரெண்ட். அப்பாவே கோபக்காரர். அவரோட இவர் ரொம்ப கோபக்காரர். கரெக்டா ஒண்ணேகால் மணிநேரம் நீங்க நம்பவே முடியாத அளவுக்கு புழிஞ்சு எடுத்துடுவார்.
டான்ஸ் கிளாஸுக்கு இடையில காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் இதுல எதாவது ஒண்ணு எடுத்துட்டு அம்மா வருவாங்க. அதை குடிக் கிறோம்கிற பேர்ல கொஞ்சம் லேட்டாக்குவோம். அதனாலயே அம்மாகிட்ட சூடா எடுத்துக்கிட்டு வரச் சொல்வோம். ‘‘சீக்கிரம் வாங்கடா’’ன்னு மாஸ்டர் கூப்பிடுவார். ‘‘சூடா இருக்கு மாஸ்டர்’’ன்னு சொல்லிட்டு அதுல ரெண்டு, மூணு நிமிஷத்தை கடத்துறது. இடையில பாத்ரூம் போகுறோம்னு கொஞ்ச நேரத்தை செலவாக்குறது. ‘நேரம் ஆச்சுடா வாங்க’னு அப்பவும் மாஸ்டர் திட்டுவார். ‘‘என்னை மட்டும் கேக்குறீங்க. அவன் வரவே இல்லையே’’னு கூட டான்ஸ் ஆடுறவங்கள மாட்டி விடுவேன். அந்த ஒண்ணேகால் மணி நேரத்துல கடைசி 10 நிமிஷம் ஜாலியா இருக்கும். ஏன்னா, கிளாஸ் முடியப்போகுதுன்னு.
ஒரு போருக்குத் தயாராகிற மாதிரிதான் மாஸ்டர் எங்களத் தயார்படுத்தினார். ஆடும்போது கால்கள் ஒரு டைமிங்ல இருக்கும். கைகள் ஒரு டைமிங்ல இருக்கணும். கண்ணு கத்தி மாதிரி கை எங்கப் போகுதோ அங்கதான் பார்த்திருக்கணும். அப்படி ஒரு பிராக்டீஸ். பயங்கர கஷ்டமா இருக்கும். ஒன்… டூ சொல்வதற்குள் உட்கார்ந்து ஒரு ரவுண்ட் அடிச்சு எழுந்திரிக்கணும். இல்லைன்னா விடவே மாட்டார். ஒரு கட்டத்துல அவர் என்ன சொன்னாலும் பண்ண ஆரம்பிச்சேன். டான்ஸைத் தவிர என்னை சுத்தி நடக்குற மத்த எல்லாத்தையும் மறந்துடுவேன். ஃபாஸ்ட்டா சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சார் மாஸ்டர். அதையும் உடனே செஞ்சுக் காட்டுவேன். இன்னும் புதுசு புதுசா சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சார். அதையும் உடனே ஆடிக் காட்டுவேன். ஒரு மாசத்துல சொல்லிக்கொடுக்க வேண்டியதை ரெண்டு நாட்கள்ல சொல்லிக்கொடுத்தார். நானும் ஆடினேன். அவருக்கு நான் ரொம்பவும் புடிக்க ஆரம்பிச்சேன். நான்னா அவருக்கு உயிர்னே சொல்லலாம்கிற அளவுக்கு.
இன்னைக்கு நான் பண்ற டைமிங்கூட, அன்னைக்கு எடுத்துக்கிட்ட வேகம்தான். ‘‘எதை செய்தாலும் சரியாப் பண்ணணும், அது ஜனங்களுக்கும் புடிக்கணும். அதுக்கு முதல்ல அது ஜனங்களுக்கு புரியணும்’’ என்பார். அப்போ அவர் தந்த அந்த டிரெயினிங்தான் இன்னைக்கு நானே தப்பு செய்தாலும், மூவ்மெண்ட்ஸை என் உடம்பு சரியா செய்யும்! புரூஸ் லீ, ஜாக்கிசான் படங்கள்ல முதல்ல அடி வாங்குவாங்க. கிளைமேக்ஸ் சண்டைக்கு முன்னாடி பயங்கரமா ஒரு டிரெயினிங் பண்ணிட்டு அடிப்பாங்களே, அப்படித்தான் எங்களுக்குக் கொடுக்குற டிரெயினிங்கும் இருக்கும். ‘ராக்கீ’ படத்துல மலையில ஏர்ற மாதிரி காட்சிங்க இருக்குமே, அப்படித்தான் வீட்டு ஹால்ல டிரெயினிங் நடக்கும்.
இன்னைக்கு மனசுல பல யோசனைகள் நிரம்பிடுச்சு. அந்தச் சின்ன வயசுல மனசுல எதுவும் பெருசா இருக்காது. அதுதான் அவ்வளவு வேகமா எல்லாத்தையும் ஏத்துக்கிச்சு. மாஸ்டர் அப்படி ஒரு டிரெயினிங் கொடுத்தார். இன்னைக்குத்தான் கடைசியா ஆடப்போறோம்னு இருந்தா எப்படி இருக்கும்? எங்க தர்மராஜ் மாஸ்டரோட டிரெயினிங் அப்படி இருக்கும்.
இப்படி டிரெயினிங் கொடுத்த மாஸ்டர்கிட்ட நான் தேசிய விருது வாங்கினப்போ, போன் செஞ்சு ஆசை ஆசையாய்ச் சொன்னேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுங்களா?
- இன்னும் சொல்வேன்…