நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்.சி/எஸ்.டி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதையடுத்து நாளை முதல் அச்சட்டம் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 1989 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள்) சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச்சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மக்களவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அதே ஆண்டு இறுதியில் டிசம்பர் 21 ஆம் தேதி மாநிலங்களவையிலும் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஜனவரி 1 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
சட்டத்துக்கான வழிமுறைகள், தண்டனைகள் வரையறை செய்யப்பட்டதையடுத்து, நாளை முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள்) திருத்த சட்டம் அமலுக்கு வருகிறது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகளின்படி, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புகளைச் சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, பாலியல் எண்ணத்தோடு பெண்களைத் தொடுவது, பாலியல் சார்ந்த வார்த்தைகளையும் சைகைகளையும் தெரிவிப்பது, அந்தப் பெண்களை கோயில்களுக்கு தேவதாசிகளாக ஒப்படைப்பது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், செருப்பு மாலைகள் அணிவிப்பது, பிரேதங்களை அப்புறப்படுத்துமாறோ அல்லது மனித மலங்களை அள்ளுமாறோ கட்டாயப்படுத்துவது, அந்த மக்கள் மீது சமூகம், பொருளாதாரம் சார்ந்த தடைகளை விதிப்பது, குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சட்டவிரோதமாக மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகளும் கடுமையான குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
