விபத்தில் விரல்கள் துண்டாகும் நிலையில், அவற்றை 6 மணி நேரத்துக்குள் மருத்துவனைக்குக் கொண்டு சென்றால் பொருத்திவிடலாம் என, ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பூபதி தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பொதுவாக பிரசவத்தின்போது குழந்தையின் தலைதான் முதலில் வெளிப்படும். ஆனால் மாறாக கையோ, காலோ வெளிப்படும்போது அந்தப் பாகங்களை பற்றி குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதனால் கை, அல்லது காலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து காணப்படும். இதை குழந்தை பிறந்த மூன்று நாளைக்குள் கண்டுபிடிக்கலாம். அண்ணப்பிளவு, உதட்டுப்பிளவு போன்று இந்தப் பிரச்னையையும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையால் சரி செய்ய முடியும். விபத்து ஏற்பட்டு ஒருவருக்கு கை விரல் அல்லது கால் விரல் துண்டிக்கப்பட்டால் சம்பவம் நடந்த 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அடைய வேண்டும். அவ்வாறு வரும்போது துண்டிக்கப்பட்ட விரலை நேரடியாக ஐஸில் வைத்து எடுத்து வரக்கூடாது.
துண்டிக்கப்பட்ட விரலை சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி அதைச் சுற்றி ஐஸ் வைத்து கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
