செவ்வாய், 24 மார்ச், 2015

சமூக வலை தளங்களில் கருத்து சொல்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து

0
தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கடந்த 2008–ம் ஆண்டில், முந்தைய காங்கிரஸ் அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதில் புதிதாக 66–ஏ என்ற சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டப்பிரிவு, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுக்க வழி வகை செய்தது. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எதிர்த்து வலை தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரவுவதைத் தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக அப்போதைய மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மரணம் அடைந்த போது மும்பையில் கலவரமும், முழு அடைப்பும் நடந்தது. இதை விமர்சித்து 2 இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் மராட்டிய மாநில போலீசார் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66–ஏவை பயன்படுத்தி கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வலைதளத்தில் கருத்து தெரிவித்த பெண்ணும், அதற்கு ‘‘லைக்’’ போட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று பலரும் விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்கால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து சில அமைப்புகளும் 66–ஏ சட்டப்பிரிவை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள், ‘‘66–ஏ சட்டப்பிரிவு முரணானது. இதை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்தி எதிராளிகளை பழி வாங்க முடியும்’’ என்று வாதிட்டனர்.

ஆனால் மத்திய அரசு வக்கீல் வாதாடுகையில், சமூக வலை தளங்களில் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் அவசியம் தேவை என்றார். காங்கிரஸ் ஆட்சி போன பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசும் சுப்ரீம் கோர்ட்டில் இதே கருத்தை வலியுறுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் செலம்ஸ்வர், நாரிமன் இருவரும் தீர்ப்பை வெளியிட்டனர். தீர்ப்பு விவரம் வருமாறு:–

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுபவர்களை கைது செய்ய வழி வகுக்கும் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66–ஏ பிரிவானது அரசியலமைப்புக்கு எதிரானதாக உள்ளது. எனவே அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

மக்கள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிடவும், பேசவும் சட்டத்தில் இடம் உள்ளது. சமூக வலைதளங்களிலும் அத்தகைய சுதந்திரத்துக்கு இடம் உள்ளது. அதை தடுக்கக் கூடாது.

மத்தியில் ஆளும் அரசு வரலாம். போகலாம். ஆனால் எந்த ஒரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66–ஏ பிரிவு கைது செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. இது பொது மக்களின் தகவல் அறியும் உரிமையை பாதிப்பதாக உள்ளது. இதன் மூலம் 66–ஏ சட்டப்பிரிவு பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு உறுதி அளிப்பதை கோர்ட்டால் ஏற்க இயலாது. எனவே சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்க இயலாது.

நமது நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உரிமையாக இருக்கும் நிலையில், கைது செய்ய வழி வகுக்கும் சட்டப்பிரிவை கொண்டு வந்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. எனவே பொதுமக்களின் அடிப்படை உரிமையை பாதிக்க செய்யும் ‘‘66–ஏ’’ சட்டப்பிரிவை நீக்க உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்தின் சட்டத் திருத்தங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் 66–ஏ பிரிவு தவிர 69ஏ மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் இரண்டு சட்டத் திருத்தங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக அவதூறு கருத்துக்களை வெளியிடும் சமூக வலைதளங்களை முடக்கும் சட்டப்பிரிவை நீக்க கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதை ஏற்கவில்லை. சமூக வலை தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் 2 சட்டப்பிரிவுகள் நீடிக்கும் என்று அறிவித்தது.

சுப்ரீம்கோர்ட்டின் இன்றைய அதிரடி உத்தரவு பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களை பயன்படுத்துபவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி மனதில் பட்டதை எல்லாம் எழுதலாம் என்பதால் இணையத்தள விமர்சகர்கள் படுஉற்சாகத்துக்கு மாறியுள்ளனர்.

ஏற்கனவே வலை தளங்களில் தங்களை பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக விவிஐபி பிரபலங்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இணைத்தள கருத்து சுதந்திரத்துக்கு தடை இல்லை என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதால் பிரபலங்களை விமர்சகர்கள் இன்னும் பிடி..... பிடி....யென பிடிப்பார்கள்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக