‘‘காலிறுதியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து எங்களுக்குப் பயமில்லை. கடந்த 2007 உலக கோப்பை தொடரில் நாங்கள் இந்தியாவை வீழ்த்தியுள்ளோம்,’’ என, வங்கதேச அணி மானேஜர் காலேத் மக்மத் தெரிவித்தார்.
உலக கோப்பை தொடரின் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற வங்கதேச அணி, இங்கிலாந்தை வென்றதை அடுத்து, காலிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்ற இந்த அணி, மார்ச் 19ல் நடக்கும் 2வது காலிறுதியில், இந்தியாவை சந்திக்கிறது.
இதுகுறித்து வங்கதேச அணி மானேஜர் காலித் மகமுது கூறியது:
காலிறுதியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து குறித்து நாங்கள் பயப்பட வில்லை. இத்தொடரில் மூன்று சிறந்த அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றோம். இந்திய அணி ‘நடப்பு உலக சாம்பியனாக’ இருக்கலாம். அதேநேரம், கடந்த 2007 உலக கோப்பை தொடரில் அவர்களை வீழ்த்தியுள்ளோம். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில், அன்றைய தினம் சிறப்பாக அல்லது மோசமாக அமைந்து விட்டால், ஒட்டு மொத்த முடிவும் மாறிப் போகும்.
இந்த உலக கோப்பை தொடரில் சாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் பெரியளவில் சோபிக்காத போதும், டஸ்கின் அகமது, சவுமியா சர்க்கார் அசத்துவதால், எங்கள் அணி சிறப்பாக செயல்படுகிறது.
பொதுவாக எங்கள் அணி எப்போதும் திறமையானது தான். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற வங்கதேச அணியை பார்த்தது இல்லை. இம்முறை காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
இவ்வாறு காலித் மகமுது கூறினார்.
