புதன், 4 மே, 2016

அரசியல் பழகு!

0
மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.

இந்தத் தமிழகத் தேர்தல், வரலாற்றுரீதியாகவும் அகில இந்திய அளவிலும் ஒரு சிறப்பைப் பெறுகிறது. வாக்காளர்களில் நான்கில் ஒருவர் புதிய தலைமுறை. இவர்களுடைய மனவோட்டம் எப்படி இருக்கிறது? இன்றைய அரசியலைப் பற்றி, அரசியல் கட்சிகளைப் பற்றி, அரசியல் தலைவர்களைப் பற்றி இவர்கள் நினைப்பதென்ன? இந்தக் கூட்டங்களில் கிடைத்த பதில்கள் ஆச்சரியமும் அவமானமும் தருபவை.

பெரும்பான்மையான மாணவர்கள் சொன்னது, “இன்றைய அரசியல் ஒரு சாக்கடை. இன்றைய அரசியல்வாதிகள் குப்பைகள். அரசியலுக்கும் யோக்கியர்களுக்கும் சம்பந்தமில்லை.” இன்றைய அரசியல்வாதிகளின் ஆடம்பரம், ஆணவம், படாடோபம் யாவும் அவர்கள் மத்தியில் அருவருப்பை உண்டாக்கியிருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன மாற்று என்று கேட்டால், “இளைஞர்களே மாற்று” என்று ஒட்டுமொத்தக் குரலில் சொல்கிறார்கள். “சரி, உங்களில் எத்தனை பேர் அரசியல் ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், கனத்த மௌனம் நிலவுகிறது. கூட்டத்தில், காமராஜர் பெயரை யாராவது உச்சரித்தால், கைத்தட்டல் பறக்கிறது. ஒரு நல்ல முதல்வருக்கான முன்னுதாரணமாக காமராஜரைப் பலரும் குறிப்பிடுகிறார்கள். அதேசமயம், காமரஜரைப் பற்றி மேலோட்டமாகக்கூடத் தகவல்கள் தெரியவில்லை.

அரசியல் மீது ஒரு சமூகத்தின் இளைய தலைமுறையிடம் இத்தனை கசப்பையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியதற்காக அத்தனை அரசியல் கட்சிகளுமே வெட்கித் தலைகுனிய வேண்டும். மாணவர்களை நொந்துகொள்ள ஏதுமில்லை. ஒருபுறம், அரசியல் மீதான அவர்களுடைய அவநம்பிக்கைக்கான எல்லா நியாயங்களையும் இன்றைய அரசியல் தலைவர்கள் இடைவிடாது கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் நம்முடைய வீட்டுச் சூழலும், கல்விச் சூழலும் அரசியலைத் தீண்டக்கூடாத பொருளாக அவர்களிடம் நிறுவியிருக்கின்றன. ஒவ்வொரு இளைஞரையும் சுற்றுச்சுவர் இடப்பட்ட தனித்தனி உலகமாக இன்றைய நம் சமூகச் சூழல் மாற்றியிருக்கிறது. முழுக்க சுயநலமும், குடும்ப நலமும் குழைத்துக் கட்டப்பட்ட சுற்றுச்சுவர். அந்தச் சுற்றுச்சுவரின் அடித்தளமே அரசியல் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

கல்யாணப் பத்திரிகை வைக்க வருபவர்களிடம் என் தாத்தா நடத்தும் உரையாடல் ஞாபகத்துக்கு வருகிறது. பெண், மாப்பிள்ளையைப் பற்றி அவர் விசாரிப்பார். “மாப்ள எந்த வம்புதும்புக்கும் போகாதவர். வீடு விட்டா வேலை, வேலை விட்டா வீடுன்னு இருக்கார். பொண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டா” என்பன மாதிரி வார்த்தைகளை எவரேனும் சொன்னார்கள், அவர்கள் தொலைந்தார்கள்! “ஏன்யா, வீட்டுலேர்ந்து வீதியில காலடி எடுத்துவெச்சா, ஊருல நடக்குற ஒவ்வொண்ணும் இந்த வயசுல என்னைக் கொந்தளிக்கவைக்குது. நீ புடிச்சுருக்குற புள்ளைக்கு இருவத்தியஞ்சு வயசாகுது. பள்ளிக்கூடம், காலேஜு எல்லாம் போயி படிச்ச ஒரு புள்ளைய ஊருல நடக்குற எதுவுமே நாளது தேதி வரை உலுக்கலை, ஒரு அநீதியைக் கண்டு மனம் பதைபதைக்கல, ஒரு தப்பைத் தட்டிக்கேட்க போராட்டம் பண்ணதில்லை; போலீஸ் ஸ்டேஷன் போனதில்லைன்னா, அது புள்ளையா, பிண்டமா? மிருகம்கூட அப்பிடி இருக்காதேய்யா! அதை எப்புடிப் பெருமையாச் சொல்லிக்குற?” என்பார்.

இன்றைக்கு நம் வீடுகளிலும் பள்ளிக்கூடங்களிலும் யாரை நல்ல பிள்ளைகள் என்று கொண்டாடுகிறோம் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. பிழைப்பது ஒன்றையே வாழ்வின் ஒரே இலக்காக்கிவிட்டோம். ஒரு சமூகத்தின் மதிப்பீடுகளும், விழுமியங்களும் எவ்வளவு சீக்கிரம் கீழே சரிந்துவிட்டன!

பதிப்பாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனிடம் சின்ன வயதில் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது அவர் இப்படிக் கேட்டார். “அரசியல் என்பது அடிப்படையில், எனக்கும் சக மனிதருக்கும் இடையேயான உறவு. அதிலிருந்து எப்படி ஒருவர் விலகியிருக்க முடியும்?”

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, என் கையில் இரு அறிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, ‘ஆக்ஸ்ஃபோம்’, ‘குளோபல் ரிச்’ நிறுவனங்களின் சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை. மற்றொன்று, ‘ஜர்னல் ஆஃப் குளோபல் ஆன்காலஜி’ மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வறிக்கை. முதல் அறிக்கை, “உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் 85 பேரின் செல்வமும் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் ஏழைகள் பாதிப் பேரின் செல்வமும் சமம்” என்கிறது. “இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 111 பேரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 2.02 லட்சம் கோடி” என்கிறது. இரண்டாவது அறிக்கை, “இந்தியாவில் புற்றுநோய்க்கு ஒவ்வொரு நாளும் 50 குழந்தைகள் பலியாகின்றனர். இந்த எண்ணிக்கை 2025 வாக்கில் ஐந்து மடங்காக அதிகரிக்கும்” என்கிறது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமான அளவில் இறப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவது, ஒரு சராசரி இந்தியக் குடும்பம் தன் ஆண்டு வருமானத்தைவிட, இருபது மடங்கு அதிகமாகச் செலவிட வேண்டியிருப்பதாலேயே பலரால் சிகிச்சைக்குச் செல்ல முடியவில்லை என்பது. இன்றைக்கு நம்முடைய வாழ்க்கை எந்தப் புள்ளியில் வந்து நிற்கிறது என்பதைச் சுட்டும் இரு செய்திகள் இவை.

இந்த இரு செய்திகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளுக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை; இந்த இரு செய்திகளாலும் நாம் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பில்லை என்று நம்பும் ஒருவரே அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியும். நம்மால் அப்படிச் சொல்ல முடியுமா?

பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.

நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.

“தம்பி, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”

“தம்பி, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”

அரங்கம் நிசப்தமானது.

ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.

இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது என்றாலும், தமிழ்நாட்டு அவலம் வேறெங்கும் கிடையாது. அரசாங்கமே மது விற்பதும் ஆட்சி நிர்வாகத்தில் தொடர்புடையவர்களே மது ஆலைகளை நடத்துவதும் அரசு அதிகாரிகளே இலக்கு நிர்ணயித்து மது விற்பனையை ஒரு சாதனையாகப் பிரகடனப்படுத்திக்கொள்வதும் இங்குதான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் மது விற்பனை வந்த பிறகான இந்த 13 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. மாநிலத்தின் உடலுழைப்புத் தொழிலாளர் வளத்தை மது உறிஞ்சிக் குடித்தது. மருத்துவமனைகளுக்குக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட கூட்டம்போல கல்லீரலால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் வந்து சென்றார்கள். அரசின் பிரதான வருமானங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல், அரசியலைப் பின்னின்று இயக்குபவர்களின் கொள்ளையாதாரமாகவும் மது விற்பனை மாறியது.

மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களில் தொடங்கி பல கரங்கள் இந்த அசிங்கத்தில் கோத்து நிற்கும்போது, இந்தத் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி எல்லோருமே மதுவிலக்கைப் பேசும் சூழல் எப்படி உருவானது? அசைக்க முடியாததாகக் கருதப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழக எதிர்க்கட்சிகளை வீதிக்கு இழுத்துவந்தது எது?

ஒரு தனிமனிதரின் தார்மிக உணர்வு. மதுவுக்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களின் மைய உந்துசக்தியாக இருந்த சசிபெருமாளின் போராட்டம். சேலம் பக்கத்திலுள்ள இடங்கணச்சாலை இமேட்டுக்காடு எனும் சின்ன கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். ஏழ்மையான குடும்பம். பதின்ம வயதில் காமராஜர் நடத்திய மது ஒழிப்புப் போராட்டம் ஈர்க்க, அப்போதே போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

சின்ன வயதிலிருந்தே பொதுக் காரியங்களுக்காக மனுவோடு அலுவலகம் அலுவலகமாக ஏறி இறங்குவது, அரசியல்வாதிகளிடம் முறையிடுவது என்று ஏதாவது செய்துகொண்டிருந்தவர் 2003-ல் தமிழக அரசு மது விற்பனையைக் கையில் எடுத்தது முதலாக மதுவுக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்தார். ஒருகட்டத்தில்

‘மதுவை

ஒழிப்போம். குடும்பங்களைக் காப்போம், தயவுசெய்து மது அருந்தாதீர்' என்று எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, மதுக் கடைக்குப் போவோர் வருவோர் கால்களில் எல்லாம் விழுந்து மன்றாடும் போராட்டத்தைத் தொடங்கினார். 2013-ல் பலரும் அரசுக்கு எதிராகப் பேசத் தயங்கிய காலகட்டத்தில், தனி ஒரு மனிதராக சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். சிறையில் அடைத்தார்கள். அதிகார வர்க்கம் எவ்வளவோ நெருக்கியது. சிறையிலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. 34 நாட்கள் நீடித்த போராட்டம் அது. மதுவுக்கு எதிரான போராட்டத்துக்காக சாகவும் தயாராக இருந்த சசிபெருமாள் கடைசியில் அது நிமித்தமான வேறு ஒரு போராட்டத்திலேயே செத்தும்போனார். “நீங்கள் எவ்வளவு பெரிய எதிரிகளோடு மோதுகிறீர்கள், தெரியுமா?” என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார், “நல்லாத் தெரியும். நான் ரொம்ப சின்னவன். ஆனா, என் பின்னாடி தர்மம் இருக்கு. அதுக்கு ஒரு நாள் அவங்க பணிஞ்சுதான் ஆகணும்!”

தமிழ்நாடு கண்ட செயலூக்கம் மிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் வி.பி.சிந்தன். ஒரு துடிப்பான இளைஞரை சிந்தனிடம் அறிமுகப்படுத்திவைத்தார் டபிள்யூ.ஆர்.வரதராஜன். அரசியல் தொடர்பாக ஆவேசமாகப் பேசிய அந்த இளைஞரை, “நீ ஏன் அரசியலுக்கு வரக் கூடாது? ஏன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையக் கூடாது?” என்று கேட்டார் சிந்தன். இப்படி சிந்தன் கேட்ட அதே வேகத்தில் இளைஞரிடமிருந்து பதில் வந்தது. “எனக்கு மலையாளிகளையும் பிடிக்காது. பிராமணர்களையும் பிடிக்காது. இன்றைய அரசியலும் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.” அது எம்ஜிஆர் ஆண்ட காலம். சிந்தனும் ஒரு மலையாளி. அவரிடம் அந்த இளைஞரை அழைத்துச் சென்ற வரதராஜன் ஒரு பிராமணர். சிந்தன் அந்த இளைஞரிடம் சொன்னார், “நீ நம்புவது உண்மை அல்ல. ஒரு பேச்சுக்கு உண்மை என்று வைத்துக்கொள்வோம். எங்களையெல்லாம் வெளியேற்றவாவது நீ உள்ளே வர வேண்டும் இல்லையா?”

வரலாற்றுத் தருணம் என்பது இதுவே. உண்மை நம் முகத்துக்கு நேரே வந்து நிற்கும் தருணம். அறம், “இதற்குத் தார்மிகரீதியாக நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேள்வி கேட்கும் ஒரு தருணம். அப்படி ஒரு தருணத்தில் நாம் என்ன செய்கிறோம்; அந்த உண்மைக்கு எப்படி முகங்கொடுக்கிறோம் என்பதே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!

- சமஸ்
நன்றி தமிழ் இந்து
Author Image
பதிவிட்டவர்: Anand

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக