சனி, 16 ஏப்ரல், 2016

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு

0
வினவு இணையதளம் நடத்திய பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பு

தேர்தல் பரபரப்பை அறுவடை செய்யும் ஊடகங்கள் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை என்ன? பொதுவில் ஊடகங்கள் உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? பொதுவான சமூக அரசியல் நடைமுறைகளில் இவற்றுக்கான பதில்களை தேட முடியுமென்றாலும் நேரடியாக மக்கள் சொல்வதிலிருந்தே அதே மக்கள் ஊடகங்கள் குறித்து அறிவதோடு ஏற்கவும் செய்வார்கள்.

ஆகவே ஒரு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். குறைந்தது ஆயிரம் பேர் என்ற இலக்குடன். கேள்விகள் எளிமையாகவும் குறைவாகவும் இருப்பின் மக்களை அதிகம் சந்திக்கலாம் என்றாலும் கேள்விகள் பதினைந்தைத் தொட்டது.

பொதுவில் கருத்து தெரிவிப்பது என்றாலே செயற்கையாக, பொதுப்புத்திக்கு ஏற்ப பேசுவதை ஊடகங்களோ, டி.வி நிலைய விவாத வித்வான்களோ மட்டுமல்ல மக்களையும் அப்படி பயிற்றுவித்திருக்கிறார்கள். எனினும் ஒரு கேள்வியில் அப்படி பதிலளித்தாலும் மறுகேள்வியில் அவர்களை உண்மையில் பதிலளிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் இக்கேள்விகள் தயார் செய்யப்பட்டன. இதில் வரும் சில கேள்விகள் – அவற்றில் இடம் பெறும் வார்த்தைகள் எந்த கணிப்பிலும் இருக்காது. ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளில் விளக்கமளித்திருக்கிறோம்.

இறுதியில் இரண்டு நாட்கள் கேள்விகளுக்கான ஆய்வு, இரண்டு நாட்கள் மக்களிடம் சென்று கணிப்பு நடத்தியது, அனுபவத்தை தொகுக்க ஒரு நாள், விவரங்களை கணினியில் உள்ளீடு செய்ய ஒரு வாரம், அலசலுக்கு சில நாள் என கிட்டத்தட்ட இரு வாரம் எடுத்துக் கொண்டோம்.

மக்கள் குவிந்திருக்கும் சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையிலும் கணிப்புகள் எடுக்கப்பட்டன. மெரினாவில் அண்ணா சமாதி முதல் காந்தி சிலை வரை கிட்டத்தட்ட 800 பேர்களிடமும், எலியட்ஸில் சுமார் 200 பேர்களிடமும் இந்த கணிப்புகள் திரட்டப்பட்டன.

மக்களே டிக் செய்யும் வண்ணம் கட்டங்களுடன் இருந்த கேள்வித்தாளை யாரெல்லாம் சுயமாக செய்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விட்டு இயலாதவர்களுக்கு உதவினோம். அந்த வகையில் முக்கால் பங்கு மக்களே டிக் செய்தார்கள். சர்வேயை எடுக்கும் நிறுவனம் ஏதோ ஒரு மீடியா ரிசர்ச் கம்பெனி என்ற பெயரில் தோழர்கள் பங்கேற்றார்கள்.

இந்த கணிப்பில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் – மாணவர்களே கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நடுத்தர வயதினர் 33 சதவீதம் பேர். ஆண், பெண் பாலினப் பிரிவினையை பொறுத்த வரை 70, 30 என்று இருக்கிறது. மொத்த கணிப்பில் ஒரு திருநங்கையும் பங்கேற்றார். கருத்துக் கணிப்பு என்றதும் மக்களுக்கு தயக்கம் இருந்தது. மாணவர்கள் அனைவரும் எந்த தயக்கமின்றி உடனே படிவத்தை படித்து நிரப்பி அளித்தனர். நடுத்தர வயதினர் பல்வேறு கேள்விகளைக் கேட்டு – எதற்கு கணிப்பு? உங்களுக்கு என்ன இலாபம், எந்த டி.விக்கு எடுக்கிறீர்கள், மறைமுகமாக எந்த கட்சிக்கு ஆதரவு என்று கண்டுபிடிக்கிறீர்களா? – என்ற விசாரணைக்கு பிறகு ஒத்துக் கொண்டனர்.

மக்கள் தொடர்பில் அனுபவம் உள்ள தோழர்கள் இந்தப் பிரச்சினைகளை திறம்பட கையாண்டு மறுத்தவர்களையும் பங்கேற்க வைத்தனர். இல்லையேல் இலக்கினை அடைந்திருக்க முடியாது. கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்களும், ஒரு சில முஸ்லீம்களும் பயத்துடன் மறுத்தனர். நாங்கள் அணுகிய பெண்களில் கணிசமானோர் தயங்கினர். மொத்த சர்வேயில் 40க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்றனர். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உண்டு. சிலர் குடும்பத்துடன் வந்திருந்தாலும் தயக்கமின்றி பங்கேற்றனர். ஒரு பெண் மட்டும் கணவன் வருவதற்குள் படிவத்தை நிரப்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினார்.
  • கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட மக்கள் – 1003 பேர்.
  • ஆண்கள் 697 – 69.5% , பெண்கள் 305 – 30.4%, மூன்றாம் பாலினம் 1 – 0.1%

வயது – விவரம்
  • 18 முதல் 25 வரை ஆண் 233 – 23.2% பெண் 135 – 13.5% மொத்தம் 36.7%
  • 26 முதல் 35 வரை ஆண் 233 – 23.2% பெண் 95 – 9.5% மொத்தம் 32.7%
  • 36 முதல் 45 வரை ஆண் 117 – 11.6% பெண் 46 – 4.6% மொத்தம் 16.2
  • 46க்கு மேல் ஆண் 114 – 11.4% பெண் 29 – 2.9% மொத்தம் 14.3%
  • மொத்தம் 1003
பங்கேற்ற மக்களிடம் வேலை விவரத்தை சரியாக விசாரித்து வாங்கினாலும் அவர்களது சொந்த ஊர், மாவட்டத்தை துல்லியமாக பதிவு செய்ய முடியவில்லை. வேலையைத் பொறுத்த வரை மாணவர்கள் 19 சதவீதமாகவும், மாத ஊதிய வேலை செய்வோர் 41%மாவகும், சிறு தொழில் செய்வோர் 21%மாகவும், இல்லத்தரசிகள் 12 சதவீதமாகவும் இருக்கின்றனர். இதன்றி கூலி வேலை செய்வோம், உதிரித் தொழில் செய்வோர், வியாபாரம் செய்வோர் குறைவாக 4% பேர்கள் இருந்தனர். இந்தப் பிரிவினர் கடற்கரைக்கு வரும் வாய்ப்பே குறைவு என்பதால் இவர்கள் இங்கே அதிகமில்லை.
3.3% பேர் விவரங்கள் தெரிவிக்கவில்லை.

வேலைப்பிரிவினை விவரம்
  • மாணவர்கள் ஆண் 122 – 12.2% பெண் 65 – 6.5% மொத்தம் 18.7%
  • மாத ஊதிய வேலை செய்வோர் ஆண் 329 – 32.8% பெண் 83 – 8.3% மொத்தம் 41.1%
  • சிறு தொழில் ஆண் 187 – 18.6% பெண் 27 – 2.7% மொத்தம் 21.3%
  • இல்லத்தரசி பெண் 115 – 11.5%
  • இதர பிரிவுகள் ஆண் 37 – 3.7% பெண் 4 – 0.4% மொத்தம் 4.1%
  • 3.3% பேர் தெரிவிக்கவில்லை.

தொலைக்காட்சியில் மக்கள் விரும்பிப் பார்ப்பது பொழுது போக்கு நிகழ்ச்சிகள்தான். அவற்றையும் கிரமமாக பார்க்குமளவு மக்களை வாழ்க்கையும் வேலை நேரமும் அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் கிடைக்கும் நேரத்தில் எதை பார்க்கிறார்கள் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் செய்திகளைப் பார்ப்போர் 41% என்று வந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை. சாப்பிடும் போது சன் டி.வியின் பிரைம் செய்தி போன்ற முக்கியமான செய்தித் தொகுப்புகளை பார்ப்பதையே அப்படி குறிப்பிடுகிறார்கள். மற்றபடி ஏதாவது பரபரப்பு செய்திகள் வந்தால் செய்தி சேனல்களை என்ன ஏதுவென்று பார்ப்பதுண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் திரைப்படம் முதலிலும், ரியாலிட்டி ஷோக்கள் இரண்டாவது இடத்திலும் சீரியல்கள் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. அதன்படி அழுகை தொடர்கள் முன்பிருந்தது போல சிகரத்தில் இல்லை.

ரியாலிட்டி ஷோக்களைப் பொறுத்த வரை அமெரிக்க வார்ப்படங்களை தமிழில் அறிமுகம் செய்த விஜய் டி.வியையே எல்லா சானல்களும் பின்தொடர்கின்றன. சிறிது காலத்தில் இவையும் மக்களுக்கு அலுக்கும் போது ரியாலிட்டி ஷோக்களில் கொஞ்சம் ஆக்சன் சேர்த்து அடிதடி என்று காட்டுவார்களா தெரியவில்லை.

1) தொலைக்காட்சியில் நீங்கள் விரும்பிப் பார்ப்பது எந்த நிகழ்ச்சி?
  • சீரியல் 14.3%
  • திரைப்படம் 22.3%
  • ரியாலிட்டி ஷோ 19.1%
  • செய்தி நிகழ்ச்சிகள் 41.1%
  • தொலைக்காட்சி பார்க்காதோர் 3.2%
  • தொகுப்பாக: பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்போர் 55.7%
  • செய்திகளைப் பார்ப்போர் 41.1%
நாளிதழ்களில் பல்வேறு பிரிவுகளில் – முதன்மைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், இலவச இணைப்புகள் – தலைப்புகள் வருகின்றன. ஒரு சிலரே அரசியல், முதன்மைச் செய்தி, விளையாட்டு பிரிவுகள் ஏன் இல்லை என்று கேட்டனர். தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்யும் ஒரு தொழிலாளி விளையாட்டு செய்திகள் மட்டும் விரும்பிப் படிப்பேன் என்றார். ஓட்டுக் கட்சிகளின் சவடால் மற்றும் ஊடகங்களின் ஜால்ரா காரணமாக அப்படி மாறியதாக அவர் தெரிவித்தார். இங்கே நாளிதழ்களில் எதை விரும்பிப் படிப்பார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் அத்தனை பேரும் தினமும் தினசரி வாங்குபவர்கள் இல்லை.

அவர்கள் ஏப்போதாவது அல்லது ஓரளவுக்கு செய்தித்தாட்கள் படிக்கும் போது இந்த வாசிப்பு விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறியலாம். வழக்கம் போல சினிமா முதன்மையாக இருக்கிறது. நடுப்பக்க கட்டுரைகள் என்று கட்டம் போட்டிருந்தாலும் மக்களைப் பொறுத்த வரை அரசியல் செய்திகள், முதன்மைச் செய்திகள், அலசல்கள் அனைத்திற்கும் அதை டிக் செய்தனர். நாங்கள் கேட்டுப் பார்த்த வரை நடுப்பக்க கட்டுரைகளை படிப்போரும், தொடர்ந்து படிப்போரும் மிகக் குறைவு. குற்றச் செய்திகள் குறித்த கட்டத்தில் “கொலை, கற்பழிப்பு செய்திகள்” என்றே போட்டிருந்தோம். பலரும் அதை ஆர்வத்துடன் டிக் செய்தார்கள். ராசிபலனையும் அப்படி டிக் செய்வதிலிருந்து நமது தினசரிகள் என்ன விதமான விழிப்புணர்வுப் பங்கை ஆற்றுகின்றன என்பதை நினைத்து ‘பெருமைப்’ படலாம்.

2. நாளிதழ்களில் விரும்பிப் படிப்பது எது?
  • ராசிபலன் 13.5%
  • சினிமா 24.6%
  • குற்றச் செய்திகள் 12.8%
  • நடுப்பக்க கட்டுரைகள் 24.6%
  • இதரவை 5.5%
  • நாளிதழ் படிக்க மாட்டேன் 18.8%
ஆன்மீகச் செய்திகளுக்கு ஒரு நாளிதழ் புகழ் பெற்றது என்பது பொதுவான வரையறையின் படியே நல்ல அங்கீகாரமில்லை. நமது நாளிதழ்களின் ஆன்மீகச் செய்திகளில் திருத்தல வரலாறு, நேர்த்திக் கடன், அறியாத அம்மன்கள், அற்புதக் கதைகள் போன்றவற்றையே சுற்று முறையில் திரும்பத் திரும்ப அச்சிட்டு இம்சிக்கிறார்கள். தமிழகத்தில் உலா வரும் சமையல் குறிப்புகளுக்கும் இதுதான் விதி என்றால் ஆன்மீகத்திற்கு இது இன்னும் கூடுதலாக பொருந்துகிறது. நாட்டில் என்ன நடக்கிறது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விட ஆன்மீக ஃபேன்டசியில் இன்புறுவது உலகில் எங்கும் இல்லாத ஒன்று. இந்த இழி புகழில் தினத்தந்தி முதலிடத்திலும், தினமலர் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. தி இந்து, தினமணி மூன்றாம், நாலாம் இடங்களில் இருப்பதற்கு காரணம் மொத்த சர்குலேஷனில் அவர்களின் இடத்தை ஆன்மீகத்திலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனாலும் வைத்தியின் தினமணியை விட மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆன்மீகத்தில் முந்துகிறார் என்பதால் தி இந்துவின் ஆன்மீக இலவச இணைப்பு ஆசிரியர் பெருமைப்படலாம்.

தமிழகத்தைப் பொறுத்த வரை அரசியும், அரசியைப் போற்றிப் பிழைக்கும் புலவர்களும் (மீடியா) எவ்வழியோ அவ்வழிதான் குடிமக்களும் என்பதற்கிணங்க ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயா-சசி கும்பல் பிரபலப்படுத்திய யாகங்கள், யாருமறியாத கோவில்கள், நேர்த்திக் கடன்கள், கஜமுக யாகங்கள் என்பதிலிருந்து அம்மாவைப் பார்க்க, மனு கொடுக்க, வேட்பாளர் தெரிவுக்கு என அ.தி.மு.க கூடராமே நல்ல நாள், முகூர்த்தம், எம கண்டம் பார்த்து தனது அடிமைத்தனத்தை காட்ட வேண்டியிருக்கும் போது தினசரிகளும் இந்த அசட்டுத்தனத்தை கடைவிரிப்பது கல்லா கட்டுவதற்கு உதவுகிறது. அதே நேரம் ஆன்மீகத்தை படிப்பதில்லை என்று ஐந்தில் ஒரு பங்கினர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

3. ஆன்மீக செய்திகளுக்கு எந்த நாளிதழ் புகழ் பெற்றது?
  • தினமலர் 18.8%
  • தி இந்து 7.2%
  • தினமணி 2.2%
  • தினத்தந்தி 38.5%
  • இதர 13.4%
  • ஆன்மீகம் படிக்காதவர்கள் 19.9%
நாட்டு நடப்புகளை மக்கள் முதன் முறையாக எந்த வழியாக அறிகிறார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆனாலும் அன்றாடம் செய்திகளை அறிந்து கொள்வோர்கள் கால் பங்கினர் கூட இருக்கமாட்டார்கள். காரணம் செய்திகளை வாசிக்குமளவு நேரமும், சமூக சூழலும் மக்களுக்கில்லை. எனினும் அவர்கள் தெரிவித்த பதிலின் படி புதிய ஊடகமான வாட்ஸ் அப் முப்பது சதவீதமும், தொலைக்காட்சி 40% இருக்கும் போது நாளிதழ்கள் 12.3% மட்டுமே செய்திகளை அறிவிப்பதில் பங்களிக்கிறது. நாளிதழ்கள் வாங்கினாலும் அதில் செய்திகளை படிப்போர் முந்தைய கேள்வியின்படி கால்பங்கினர் எனும் போது இந்த கேள்வியைச் சேர்த்து பார்த்தால் மூன்று சதவீதம் பேரே செய்திகளை தினசரிகளில் படிக்கிறார்கள் என்றாகிறது. அதே போல தொலைக்காட்சிகளில் 40 சதவீதம் பேர் செய்திகளை பார்க்கிறார்கள் என்ற முந்தைய கேள்வியை இதில் பொருத்தினால் 15 சதவீதம் பேரே மொத்த எண்ணிக்கையில் தொலைக்காட்சி செய்திகளை படிக்கிறார்கள் என்றாகிறது. தமிழகத்தின் அச்சு ஊடகம் மற்றும் சானல்களின் டி.ஆர்.பி மகிமை வலிமை எல்லாம் இந்த கால்பங்கினைத் தாண்டாது என்பதே உண்மை.

4. செய்திகளை நீங்கள் முதன்மையாக தெரிந்து கொள்வது எதில்?
  • வாட்ஸ் அப் / பேஸ் புக்: 31.7%
  • நாளிதழ்கள்: 12.3%
  • தொலைக்காட்சி: 39.3%
  • நண்பர்கள்: 6.7%
  • செய்திகளில் ஆர்வமில்லை: 10%


செல்பேசிகளில் வாட்ஸ் அப் பயன்பாடு 30% பேர்களிடம் இல்லை என்பதோடு, வாட்ஸ் அப்பில் அதிகம் பார்க்கப் படுவது நொறுக்குத் தீனி வகையறாக்கள்தான். செய்திகளை 39%-ம் பேர் பார்க்கிறார்கள் என்பது அதிகமும் பரபரப்பு செய்தி, காமடி செய்தி வகைகளைச் சார்ந்தே இருக்கின்றன. ஆக இங்கும் செய்திகளை பார்ப்போர் உண்மையில் கால் பங்கினராகவே இருக்கின்றார்கள். இறுதியில் நாளிதழ், தொலைக்காட்சி, வாட்ஸ் அப் அனைத்திலும் முக்கால் பங்கு மொக்கைகளாகவும், கால் பங்கு பயனுள்ளவைகளாகவும்தான் நுகரப்படுகின்றன. தொழில் நுட்பம் மாறினாலும் தினத்தந்தியின் ஆண்டியார் பாடுகிறார் வாட்ஸ் அப்பில் கவுண்டமணி, வடிவேலு மீம்ஸ்ஸாக அவதாரம் எடுக்கின்றன அவ்வளவே!

5. வாட்ஸ் அப் பயன்பாடு
  • பயன்படுத்துபவர்கள்: 69.3%
  • பயன்படுத்துவதில்லை: 30.7%

6. வாட்ஸ் அப்பில் நீங்கள் விரும்பி பார்ப்பது?
  • ஜாலி வீடியோ: 33.6%
  • மீம்ஸ்: 11.5%
  • கவர்ச்சி: 1.6%
  • செய்திகள்: 39.2%
  • இதர: 14.1%
செய்தி ஊடகங்களில் செல்வாக்கு இதுதான் என்றால் அதில் அட்வைசாலேயே சித்திரவதை செய்யும் பிரபல செய்தியாளர்களின் செல்வாக்கு என்ன? தி இந்து நாளிதழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகளில் சமஸே அதிகம் கருத்துரைக்கிறார், காரணம் அவர் தானே ஆசிரியர் என்ற முறையில் முடிவு செய்கிறார்! ராகுல் காந்தி முதல், ஒபாமா வரை சகலருக்கும் ஆலோசனைகளை அள்ளி விடும் இவர், கொலைகாரர்கள் நினைத்தால்தான் சமாதானத்தை கொண்டு வர முடியும் என்று கொலைகாரர்களுக்கும் அட்வைசு சொல்பவர். ஏதோ சில கட்டுரைகளுக்கு தனது மின்னஞ்சல் ஆயிரக்கணக்கான மடல்களால் நிரம்பி வழிகிறது என்று சமஸ் சொல்வது உண்மை என்றாலும் தமிழக மக்களிடம் இவரது அறிமுகம் என்ன?

பலர் சமஸ் என்றால் என்ன என்றார்கள். சிலர் கோன்பனேகா குரோர் பதி பாணியில் ஏதோ ஒன்றை டிக் செய்வோம் என்று அடித்தார்கள். சில மாணவர்களோ சமஸ் என்பவர் யார் என்பதை படிவத்தை நிரப்பி கொடுக்கும் போதாவது சொல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள். காரணம் இந்தப் பேரே அவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது, நமக்கு சமஸின் கொள்கை போல. பத்திரிகையாளர் என்று எட்டு சதமானோர் கூறியிருப்பதே பெரிய விசயம்தான்.

7. சமஸ் என்பவர் யார்?
  • இயக்குனர் : 2.4%
  • ஜோசியர் : 1.2%
  • தொழிலதிபர் : 3.2%
  • பத்திரிக்கையாளர் : 8.4%
  • தெரியாது : 84.8%
தொலைக்காட்சியின் வீச்சுக்கேற்ப பாண்டேவை சுமார் 33%பேர்களுக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் மற்ற பிரபல நிகழ்ச்சிகளை இவர்தான் நடத்துகிறார் என்று கூட்டுத் தொகையில் சுமார் 11 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போதும், பாண்டே யார் என்று தெரியாது என 55% தெரிவித்திருப்பதாலும் தந்தி டி.வியின் தலைமை செய்தியாசிரியர் ரொம்பவும் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. மேலும் இந்த படிவத்தில் மற்ற பிரபலமான நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை கணிசமானோர் கண்டுபிடித்துவிட்டு, சந்தேகத்தின் பலனை ஆயுத எழுத்திற்கு வழங்கியிருப்பதையும் கூற வேண்டும். இறுதியாக பாண்டே பெயர் பார்த்து ஆயுத எழுத்தை டிக் செய்த சிலர் பாண்டேவைத் திட்டவும் செய்தனர்.

கணிப்பில் பங்கேற்ற ஒரே திருநங்கை, பாண்டேவை அவர் மொழியில் திட்டினார். மத்தவங்க மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரிக்கும் போது இவர் வெளிப்படையாக கொ.ப.சேவாக முதுகு சொறிகிறார் என்றார் அவர். ஈரோட்டிலிருந்து வந்த ஒரு விவசாயி “தந்தி டி.வி.யை சென்னையின் குப்பைக் கிடங்கு” என்றார். மற்றுமொருவர் தான் போகோ சானல் கூட பார்ப்பேன், ஆனால் விவாதங்களை பார்க்க மாட்டேன் என்றார்.

8. ரங்கராஜ் பாண்டே நடத்தும் நிகழ்ச்சி?
  • கொஞ்சம் நடிங்க பாஸ் : 3.6%
  • சொல்லுங்கண்ணே சொல்லுங்க: 2.3%
  • நீயா நானா? : 5.3%
  • ஆயுத எழுத்து: 33.4%
  • தெரியாது: 55.4%
எஸ்.ஆர்.எம் பல்கலை நிறுவனம் மாபெரும் வருமானத்தை தரும் பெரு உற்பத்தியாக மாறிய போது பாரிவேந்தர் பச்சமுத்து மகிழ்ச்சியடைந்தாலும் ஒரு வருத்தம் அவருக்கு இருக்கவே செய்தது. எவர் வீட்டு பணமோ இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு என்று பெரும் கட்சிகள் மட்டுமல்ல, முகவரியே இல்லாத அனாமதேயக் கட்சிகள் கூட அன்னாரை சந்தித்து மாமுல் வாங்கி வந்தனர். தனது தொழிலுக்கு இது பாதுகாப்புதான் என்றாலும் இதற்கு முடிவே இல்லையா என்று யோசித்த வேந்தருக்கு உதித்த யோசனைதான் கட்சி ஆரம்பிப்பது!

அப்படி “இந்திய ஜனநாயகக் கட்சி” ஆரம்பித்து கூடவே புதிய தலைமுறை பத்திரிகை, தொலைக்காட்சி, புது யுகம் என்று அம்பானி போல ஆட்சியை விரிவுபடுத்தினார் பாரிவேந்தர். எழுத்தாளர்களுக்கு விருது, திரை நட்சத்திரங்களுக்கு பாராட்டு – கவனிப்பு என்று தொழில் சுத்தமாக போன பிறகு தனது கல்வித் தொழிலை இந்திய அளவில் கொண்டு போக பா.ஜ.கவுடன் நெருங்கினார். மோடி கூட்டத்திற்கு மட்டுமல்ல, தேர்தலுக்கே ஸ்பான்சர் அளித்தார். அதில் முக்கியமானது தொலைக்காட்சி மூலம் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்களான அற்பங்கள் பலரை விவாத வித்வான்களாக்கி அரசியல் என்றாலே அது பா.ஜ.க பார்ப்பது போலத்தான் என்று மாற்றினார்கள்.

அதே போல அ.தி.மு.க – ஜெயலலிதாவை அண்டிப் பிழைக்கும் தமிழ் ஊடக வழக்கப்படி மழை வெள்ளத்தின் போது கூட அரசை கண்டிக்காமல் மயிலிறகு வருடலை வாசித்தார்கள். புதிய தலைமுறை மாலனோ ஜெயா கட்சி கூட்டத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் போல அம்மாவுக்கு தாளம் போட்டார். இருப்பினும் பொதுவில் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றாலே நடுநிலைமை என்றொரு மூட நம்பிக்கை இங்கே நிலவுகிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதற்கு இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.

மொத்தம் 29 சதம் மக்கள் அதை ஏதோ ஒரு கட்சி சார்பு என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். 18 சதமானோர் எந்தக கட்சி சார்பு என்று தெரியாது என்றும், 52,8 % பேர்கள் கட்சி சார்பற்றது என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆக சரிபாதிப்பேர்கள் மட்டும் புதிய தலைமுறையை கட்சி சார்பற்றது என்று குறிப்பிடுவது அந்த தொலைக்காட்சியின் பெயர் பெரிதும் ரிப்பேராகி வருவதையே காட்டுகிறது. கட்சி சார்பு என்று குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதம் பேர்கள் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே என்றும், 8%பேர்கள் அ.தி.மு.க என்றும், 4.5 % பேர்கள் பா.ஜ.க என்றும் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை என்பது இந்த கேள்வியில் தெரிய வருகிறது. இதே கேள்வி மட்டும் புதிய தலைமுறை ஆரம்பித்த முதல் வருடத்தில் கேட்டிருந்தால் கட்சி சார்பற்றது என்பதே அதிகம் வந்திருக்கும். தற்போது அது மாறி வருகிறது.

மெரினாவில் இரண்டு இளைஞர்கள் தங்களை எஸ்.ஆர்.எம் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கேள்விக்கு எங்களிடமே கேட்கிறீர்களே என்று சிரித்தனர். எது சரி என்று கருதுகிறீர்களோ அதை டிக் செய்யுங்கள் என்றதும் சிரித்துக் கொண்டே ஐ.ஜே.கேவிற்கு போட்டனர். கடைசிக் கேள்விக்கும் நம்ப முடியாது என்ற பதிலை அளித்தனர். ஒருவர் தன்னை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஏறக்குறைய இதே பதில்களை அளித்தார். ஆக அங்கே வேலைபார்ப்பவர்களுக்கே புதிய தலைமுறை நடுநிலைமையானதில்லை என்பதை பொதுவெளியில் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.

9. புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?

  • அ.தி.மு.க 8.0%
  • பா.ஜ.க 4.6%
  • தி.மு.க 3.7%
  • பச்சமுத்துவின் ஐ.ஜே.கே 12.7%
  • கட்சி சார்பற்றது, 52.8%
  • தெரியாது 18.2%
தேர்தல்களில் வாக்களிப்பதை மக்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பது பொதுவில் தெரிந்த ஒன்றுதான். அந்தந்த காலப் பிரச்சினைகள், கட்சி சார்பு, தலைவர் மதிப்பு, ஊடகங்களின் கருத்துருவாக்கம் அனைத்தும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. எனினும் அதைக் குறிப்பிட்டு கேட்கும் போது 80% பேர்கள் நானே தீர்மானிப்பான் என்றார்கள். பதில்களில்இதைத்தான் டிக் செய்வார்கள் என்றாலும் அதன் சதவீதம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய விரும்பினோம். அதே நேரம் குடும்பம் தீர்மானிக்கும் என்பதை 6%பேர்களும் அதில் பெண்கள் கணிசமானோர், தலைவர்கள் என்று 6%பேர்களும் கூறியிருந்தனர். ஆக இந்த செல்வாக்கில் ஊடகங்களின் பங்கு வெறும் 1.7% என்பது முக்கியமானது. மக்கள் கருத்தை அவர்களே மட்டும் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையானாலும் ஊடகங்களை விட தலைவர்கள் மூன்று மடங்கு அதிகமாக மக்களை பாதித்திருக்கின்றனர் என்றால் ஊடகங்களின் செல்வாக்கு குறித்து ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். எதுவுமில்லை என்று 5.8 சதமானோர் கூறியிருப்பது அவர்களுக்கு வாக்களிப்பில் ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.

10. உங்கள் ஓட்டு எந்தக் கட்சிக்கு என்பதை யார் தீர்மானிப்பார்கள் ?

  • நான் 80.1 %
  • குடும்பம் 6%
  • தலைவர்கள் 6.3%
  • ஊடகங்கள் 1.7%
  • எதுவுமில்லை 5.8%

எந்த சர்வேயிலும் ஜால்ரா என்ற ‘பண்பாடற்ற’ வார்த்தை இடம் பெறவே பெறாது. ஆயினும் ஜால்ரா அடிப்பதில் தமிழக பத்திரிகைகள் சாதனை படைப்பதால் வேண்டுமென்றே இந்த வார்த்தையை வைத்தோம். மேலும் இதைப் பார்த்து யாராவது கோபத்துடன் ஏன் ஜால்ரா என்று போட்டீர்கள், நீங்கள் தி.மு.கவா என்று கேட்பார்கள், அவர்கள் எத்தனை பேர் என்று பதியவும் விரும்பினோம். இறுதியல் இரண்டு அ.தி.மு.க பொறுப்பில் உள்ளவர்களைத் தாண்டி 1001 பேர்கள் ஏன் என்று கேட்கவில்ல மட்டுமல்ல, டக்கென்று டிக் செய்யவும் செய்தார்கள்.

ஜால்ரா அடிப்பதில் பல பத்திரிகைகள் இருந்தாலும் தினமணி, தினத்தந்தி, குமுதம், தமிழ் இந்து போன்ற நான்கு ஜால்ராக்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். 15% மக்கள் தெரியாது என்று கூறியதைப் பார்த்தால் அவர்கள் இந்த பத்திரிகைகளை படிப்பதில்லை, அறிவதில்லை என்றும் சொல்லலாம். 41% மக்கள் எதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தினமலர், சோ, கல்கி வகையறாக்களை குறிப்பிட்டார்கள். எனினும் இந்த 42% போக பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஊடக ஜால்ராவை ஒரு உண்மையாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்குலேஷன் குறைவினால் குமுதம் 3%, தமிழ் இந்து 2.7% என்று இருந்தாலும் இவர்கள் மற்ற பத்திரிகைகளை விட ஜால்ராவில் குறையுள்ளவர்கள் என்பதல்ல. அதே நேரம் சர்குலேஷன் குறைவாக இருந்தாலும் தினமணி கிட்டத்தட்ட 12% பெற்றதைப் பார்த்தால் வைத்தி மாமவின் அம்மா சஷ்டிக் கவசப் புராணம் வீண் போகவில்லை எனலாம். ஒரு சதவீத மக்கள் அனைத்து பத்தரிகைகளும் ஜால்ராக்கள்தான் என்கின்றனர். இறுதியாக தினத்தந்தி மட்டும் 24% அதாவது கால்பங்கு பெற்று முதலிடத்தில் உயர்ந்து நிற்கிறது.

ஆக தமிழ் நாளிதழ்களில் மட்டுமல்ல அம்மா ஜால்ராவிலும் அதுவே நம்பர் ஒன்!

11. அ.தி.மு.க-விற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை எது ?
  • தினமணி 11.9%
  • தினத்தந்தி 24.2%
  • குமுதம் 3.1%
  • தமிழ் இந்து 2.7%
  • எதுவுமில்லை 40.9%
  • தெரியாது 16.3%
  • அனைவரும் 0.9%

இந்தக் கேள்வி சர்வேயில் இடம்பெறவில்லை. மாறாக ஆனந்த விகடனில் எதைப் படிப்பீர்கள் என்ற அடுத்த கேள்வியை தவிர்த்தோர் மற்றும் பதிலளித்தோர் எவ்வளவு என்பதை அறியவே இதை தொகுத்திருக்கிறோம். தவிர்த்தவர்களை ஏன் என்று கேட்ட போது அவர்கள் ஒரு முறை கூட விகடனை வாங்கியவர்கள் இல்லை என்று தெரிந்தது. கிட்டத்தட்ட இவர்களுக்கு விகடன் என்ற பத்திரிகையே தெரியாது எனலாம். பதிலளித்தோர் பலரும் கூட ஏதோ ஒரு முறை அல்லது சில முறை படிப்பவர்களே அதிகம். இறுதியில் 60% பேர் விகடனை அறியாதவர்கள் என்றும், 40% பேர்கள் அறிந்தவர்கள் என்று வருகிறது. பாரம்பரிய பத்திரிகையின் வீச்சு கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மட்டும் போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

12. ஆனந்த விகடன் குறித்த கேள்வியைத் தவிர்த்தோர், பதிலளித்தோர்
  • பதிலளித்தோர் 39.9%
  • தவிர்த்தோர் 60.1%
6% பேர்கள் விகடனில் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் என்பதோடு சினிமாவும், சாப்பாடு – மருத்துவ செய்திகளும் கிட்டத்தட்ட சம அளவில் 34%பேர்கள் விரும்புகிறார்கள். முந்தைய காலத்தில் இந்தப் படிப்பு விருப்பம் என்பது தீனி செய்திகளை விட சினிமா அதிகம் இருந்திருக்கும். தற்போதைய நுகர்வு கலாச்சார பரவலுக்கேற்ப தீனியும் சினிமாவோடு போட்டி போடுகிறது. மொத்தத்தில் அரசியல் செய்தி கால் பங்குதான் என்பதால் இனி விகடன் குழுமம் தனது மொத்த பத்திரிகைகளையும் டைம்பாஸ் போல மாற்றிவிட்டால் போதும்!

13. விகடனில் விரும்பிப் படிப்பது

  • சினிமா 34.2%
  • படங்கள் 6%
  • உணவு / மருத்துவம் 33.9%
  • அரசியல் 25.9%
அடுத்தது முக்கியமான கேள்வி. தேர்தல் சூட்டில் முக்கிய இடத்தை வகிக்கும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளை கிட்டத்தட்ட 70% மக்கள் நம்பமாட்டேன் என்கிறார்கள். 30% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது உண்மையென்றால் கருத்துக் கணிப்புகளின் யோக்கியதையையும் நாம் அறியலாம். வினவு குழு கருத்துக் கணிப்பு எடுக்கும் போதே கணிசமானோர் நீங்கள் எந்த டி.வி, உங்கள் பொருளாதார நோக்கம் என்ன, நீங்களே டிக் செய்து கொண்டு பொய்யாகத்தானே போடுவீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

பல மாணவர்கள், இளைஞர்கள் கனிவாக,”ஏண்ணா இப்படி வெயிலில் அலைகிறீர்கள்? நீங்களே டிக் செய்து கொடுக்கலாமல்லவா?” என்று அன்பாகவும் கேட்டார்கள். சர்வேக்களுக்கு தொண்டர்கள் சப்ளை செய்யும் ஒருவரோ நாம் பரஸ்பரம் தொடர்புபடுத்திக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக ஊடகங்கள் எடுக்கும் சர்வேக்களை அவர்களது செய்தியாளர்கள் எடுக்கும் பட்சத்தில் அது அவர்களே பாதிக்குமேல் டிக் அடிப்பதாக இருக்கும். இதை பல்வேறு ஊர்ப்பகுதிகளில் உள்ள செய்தியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்து தொழில்முறை கம்பெனிகள் என்னதான் தரத்தையும், சோதனையும் செய்தாலும் அங்கும் இந்த அவர்களே டிக் செய்வது கணிசமாக இருக்கும். இதற்கு மேல் எடிட்டரின் மேசையில் அந்த புள்ளிவிவரங்கள் வெட்டி சேர்க்கப்பட்டு மாறும். இப்படித்தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வைகோ அவர்கள் விருதுநகரில் வெல்வார் என சர்வே ரிசல்ட் வந்தது. ஆகவே கருத்துக் கணிப்புகள் யார், எங்கே, எப்போது எடுக்கிறார்கள், ஈடுபடுபவர்கள் யார், அவர்களது ஊதியம் என்ன என்று பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளோடு தொடர்புடையது. இதைத்தாண்டி ஊடகங்களின் கட்சி சார்பு தனி.


14. ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பை நம்புவீர்களா?
  • நம்புவேன் 30.9%
  • நம்பமாட்டேன் 69.1%

முந்தைய கேள்வியோடு தொடர்புடைய கேள்வி இது. ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பிற்கு காரணம் உண்மை நிலவரத்தை வாசகர்களுக்கு அறியத் தருவது என்பதை 28% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட மேற்கண்ட கேள்வியின் நம்புவேன் என்ற 31%-த்தோடு ஒத்துப் போகிறது. 18% பேர்கள் கட்சி சார்புதான் காரணம் என்று கூறியிருப்பது தமிழக ஊடகங்களை செருப்பால் அடித்ததற்கு சமம். 11%பேர்கள் அரசு விளம்பரம் என்றும் 43%பேர்கள் பரபரப்பு விற்பனைக்கு என்றும் கூறியிருக்கிறார்கள். பரபரப்பு விற்பனை கூட வாசகரை உணர்ச்சிகரமாக உசுப்பி விட்டு பணத்தை சுரண்டுவதுதான்.

15. ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பிற்கு காரணம்
  • கட்சி சார்பு 18.0%
  • அரசு விளம்பரம் 10.9%
  • பரபரப்பு விற்பனை 42.8%
  • உண்மை நிலவரம் 28.3%

நமது கருத்துக் கணிப்பில் இதுவும் ஒரு முக்கியமான கேள்வி. தமிழக ஊடகங்களில் கணிசமானவை இன்று முதலாளிகளுக்கு சொந்தம். விரைவில் அம்பானியின் தொலைக்காட்சி தமிழில் வர இருக்கும் நிலையில் மக்கள் என்ன கருதுகிறார்கள்?

முதலாளிகள் தொலைக்காட்சி நடத்தினால் நேர்மையாக இருக்காது என்று 84% மக்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். 13%பேர்கள் நேர்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அவர்களிடம் கேட்ட போது, உழைப்பினால் உயர்ந்த அம்பானி போன்ற முதலாளிகள் டி.வி நடத்தினால் உண்மையாக இருக்கும் என்றார்கள். எனினும் ஊடகங்களின் சார்புத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை ஒரு முதலாளி எப்படி காலி செய்ய முடியும் என்பதை பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது. ஆக பச்சமுத்துவின் புதிய தலைமுறை, வைகுண்டராஜனின் நியூஸ் 7, அம்பானியின் புதிய டி.வி அனைத்தும் நேர்மையாக இருக்காது என்பதே தமிழக மக்களின் தீர்ப்பு!

16. அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற முதலாளிகள் ஊடகங்களை நடத்தினால் நேர்மையாக இருக்குமா?
  • இருக்கும் 12.7%
  • இருக்காது 84.2%
  • தெரியாது 3.1%

இறுதியாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் ஒரு விசயம் இருக்கிறது. வேண்டுமென்றே கட்சி சார்பான டி.விக்களை மட்டும் இதில் இடம் பெறவைத்தோம். அதில் மக்கள் எதை நம்புகிறார்கள், நம்பவில்லை என்பதை அறிவது நமது விருப்பம்.

45% மக்கள் எதையும் நம்பவில்லை என்றதோடு ஏன் மற்ற தொலைக்காட்சிகளை போடவில்லை என்று சிலர் கோபத்தோடு கேட்கவும் செய்தார்கள். சன் டிவி பொதுவாக இருந்தாலும் அது தி.மு.க சார்பாகவே இருப்பதும் மக்களுக்குத் தெரியும். இருப்பினும் தமிழ் மக்களை சன் தொலைக்காட்சி ஆரம்பத்திலிருந்தே மசாலா தொடர்கள் – நிகழ்ச்சிகள் மூலம் நெருக்கமாக வைத்திருப்பதால் கிட்டத்தட்ட 40% மக்கள் அதை நம்புவதாக தெரிவித்தார்கள். சன் மற்றும் கலைஞர் டிவியின் கூட்டுத்தொகையோடு ஒப்பிடும் போது ஜெயா டி.வி 7.5% பெற்றிருப்பது குறைவுதான். ஆனால் கேப்டன் டி.வி 4.7 பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சன், ஜெயா, கலைஞர் போன்ற தொலைக்காட்சிகள் வணிக நோக்கில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால் பொதுவான மக்களே அவற்றை பார்ப்பதுண்டு. அப்படி எதுவுமில்லாமலேயே ஐந்து சதவீதம் பேர் கேப்டன் டீ.வியை நம்புவது ஆச்சரியமானதுதான். ஒருவேளை சமீப காலமாக ஜெயா எதிர்ப்பு நிகழ்ச்சிகள், மக்கள் கருத்துக்களை மற்ற தொலைக்காட்சிகளை விட கேப்டன் டி.வி காட்டியது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.


17. கீழ்க்கண்ட தொலைக்காட்சிகளில் எதை ஓரளவு நம்பலாம்?

  • சன் டிவி 39.5%
  • கலைஞர் டிவி 2.9%
  • ஜெயா டிவி 7.5%
  • கேப்டன் டிவி 4.7%
  • எதுவுமில்லை 45.3%


கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்புகள்தான் என்றால் அது மிகையல்ல. அ.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதை குறிப்பிடும் தி இந்து நாளிதழ் அதற்கான இணைய சர்வே கேள்வி பதிலை எப்படி வைத்திருக்கிறது?

இது ஜெயலலிதாவின் அ) தன்னம்பிக்கை ஆ) சரியான வியூகம் இ) அதீத நம்பிக்கை.

கவனியுங்கள் மூன்று பதில்களுமே நேர்மறையான முடிவோடு தொடர்புடையவை. தன்னம்பிக்கை என்பது ஜெயாவின் உறுதியான பண்பையும், சரியான வியூகம் என்பது ஜெயாவின் சாணக்கிய அறிவையும், அதீத நம்பிக்கை என்பது ஒரு வீரனின் கடும் இலட்சிய உறுதியையும் குறிப்பதோடு தொடர்புடையவை.

அனைத்து தொகுதிகளிலும் ஜெயா போட்டியிடுவது அ) சர்வாதிகார போக்கு ஆ) தவறான வியூகம் இ) பணத்தின் மேல் நம்பிக்கை என்றும் இருக்கலாம் அல்லவா?

புதிய தலைமுறை எடுத்த சர்வேயில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். முதலில் சட்டம் ஒழுங்கு என்று மக்கள் எதைக் கருதுகிறார்கள்? தடியடி, துப்பாக்கி சூடு, போராட்டத்தை ஒடுக்குவது, சிறைக்கு அனுப்புவது இவற்றைக் கூட நடுத்தர வர்க்க மக்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்குரிய சாட்சியாகவே கருதுகிறார்கள். ஜெயா ஆட்சியில் ஊர்வலங்களே நடக்காது, போராட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று கருத வைப்பதின் மூலம் என்ன உண்மை தெரிய வரும்?

அல்லது அந்தக் கேள்வியையே மக்கள் போராட்டத்தை எந்தக் கட்சியின் ஆட்சி கடுமையாக ஒடுக்கும்? என்று கேட்கலாம் அல்லவா?

ஆகவே ஊடகங்கள் செய்திகளை தெரிவிப்பதிலிருந்து, கருத்து – கண்ணோட்டங்களை வெளியிடுவது வரை அவை யாருக்கு சார்பாக இருக்கும் என்பதை மறைக்க முடியாது. வினவு நடத்திய இந்த பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பும் அதைத்தான் நிறுவுகிறது.

நன்றி வினவு
Author Image
பதிவிட்டவர்: Anand

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக