ஆபாச இணையதளங்கள் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியில் மத்திய உள்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. இதன் மீது ஆலோசனை செய்ய இரு குழுக்களையும் அமைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் அளித்த நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இணையதளங்களில் வெளியாகும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் (போர்னோகிராபி) சமூகத்தில் பிரச்சினைகளை உண்டாக்கி வருவதாகப் புகார்கள் நிலவி வருகின்றன.
இதைக் கண்காணித்து தடுப்பதுடன், ஆபாச இணையதளங்கள் பிரச்சனை தொடர்பாக தனிச்சட்டம் வகுக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் கடந்த ஜனவரியில் செய்யப்பட்டுள்ளது.
இதை உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கமலேஷ் வாஸ்வானி தொடுத்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பதில் கேட்டு நோட்டீஸ் அளித்திருந்தது. இதற்கான பதிலை கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்தது.
இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் அசுதோஷ் ஜெயின் கூறுகையில், ‘நம் நாடு முழுவதிலும் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் வழியாக போர்னோகிராபியின் சைபர் கிரைம், இ-மெயில் மற்றும் சமூக இணையதளங்கள் திருட்டு (ஹேக்கிங்), குழந்தைகளுக்கான போர்னோகிராபி, ஆபாச வலைதளங்கள் மூலம் மோசடி உட்படப் பல்வேறு வகையான மோசடிகள் சமூகத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதை சமாளிப்பது சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் அமைப்புகளுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இவற்றில் குழந்தைகளுக்கான ஆபாச வலைதளங்களின் குற்றங்களை ஆபாச குற்றம் தடுப்பு சட்டம் 2012-ன் 14 முதல் 15 வரையிலான பிரிவுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தகவல் தொடர்பு சட்டம் 2000-ன்படி 67, 67ஏ மற்றும் 67 பி ஆகிய பிரிவுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எனினும், இந்த குற்றங்கள் முற்றிலும் நடைபெறாமல் தடுக்க மேற்கண்ட சட்டங்களை தீவிரமாக திருத்தி அமல்படுத்த வேண்டி உள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வல்லுநர்கள் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என குறிபிட்டுள்ளார்.
இந்த குழுக்களில் ஒன்றில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சையின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் வலைதளக் குற்றங்கள் கண்டுபிடிக்கும் நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு குழு மத்திய சட்டத்துறையின் முன்னாள் சட்டத்துறை செயலாளரான டி.கே.விஸ்வநாதன் தலைமையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
