இந்தியா உட்பட உலகை பயமுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலுக்கு பிரஞ்ச் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோஃபியின் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதை, நமது இதழில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.இந்த தடுப்பூசியை இந்தியாவிலும் சந்தைப்படுத்த அந்நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. இது குறித்து சனோஃபி நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: . உலகிலேயே முதன் முறையாக டெங்கு காய் ச்சலுக்கு தடுப்பூசியை சனோஃபி நிறுவனம் மட்டுமே கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளோம். இந்தியாவில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளான டெல்லி, லூதியானா, கொல்கத்தா, புனே, பெங்களூரு ஆகிய பகுதிகளில் 18 வயது முதல் 45 வயதுடையவர்களிடம் இந்த மருந்துக் கொடுத்து ஆய்வு செய்தோம். நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. ஆகவே இந்திய அரசு எங்கள் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார் க்கிறோம்" என்றார். மேலும் அவர்,"டெல்லியில் மட்டும் இந்த ஆண்டு 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 38 பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலேயே இது அதிகமாகும். உலகளவில் 128 நாடுகளில் 400 மில்லியன் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 22 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த மருந்துக்கான விலை விரைவில் நிர்ணயம் செய்ய இருக்கிறது. அரசு, பெரிய அளவிலான சுகாதார அமைப்புகளுடன் இணைந்து நிதியுதவியுடன் கூடிய டெங்கு தடுப்பூசி முகாம்களை நடத்தவும் தயாராக இருக்கிறோம். பொது சுகாதார துறையில் இந்த மருந்தை அறிமுகம் செய்வதன் மூலம் விலையை குறைக்க உதவும்" என்று அவர் கூறினார். இந்தியாவில் இந்த நிறுவனம் மேற்கொண்ட தடுப்பூசி ஆய்வில் முதன்மை பரிசோதகராக பணியாற்றியவர் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் துபே. இவர், '' டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மூன்று டோஸ் இந்த மருந்து கொடுக்கப்பட்டவுடன் ரத்தத்தில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் நான்கு வகையான வைரஸ்களை எதிர்த்து செயல்படுகிறது. இந்த மருந்தை பயன்படுத்திய பிறகு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இறப்பு ஏற்படவில்லை. பக்க விளைவுகளும் ஏதும் ஆய்வின் போது ஏற்படவில்லை'' என்றார். "இந்த டெங்கு தடுப்பூசிக்கு இந்திய அரசு விரைவில் அனுமதி அளிக்கும்" என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.